கொழும்பு மாநகரில் கப்பித்தாவத்தையில் அமைந்திருக்கும் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோயில் மிகவும் புராதீனமானது. கெழும்புபட்டணத்தில் முதன்முதலாக அமைந்த ஆலயம் இதுவே ஆகும். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்ற ஒளவையாரின் வாக்கின்படி இங்கு வந்து வசித்து வர்த்தகம் செய்த ‘திருவிளங்க நகரத்தார்’ என்ற அழைக்கப்படும் வணிக வைசியச்செட்டியார்களால் இவ்வாலயம் கட்டப்பட்டது.
இலங்கையில் டச்சுக்காரர் (ஒல்லாந்தர்) களுடைய ஆட்சியின் அந்திய வாணிய செட்டிமார் காலத்தில்தான் இங்கு வந்த சேர்ந்தனர். அப்பொழுது கண்டியில் ஸ்ரீ ராஐசிங்கன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். டச்சுக்காரர்கள் கரையோரப் பிரதேசங்களில் ஊன்றிக்கொண்டு வியாபாரத்தைக் கவனித்து வந்தார்கள். இந்தியாவிலிருந்து வந்த வாணிய செட்டிமார்கள் கொழும்பில் மற்ற அன்னியர்களைப் போலவே வர்த்தகத்தில் ஈடுபட்டடனர்.
கப்பித்தாவத்தையிலுள்ள ‘கில்மபூதத்தை’ அல்லது ‘கதுறுகாவத்தை’ என்ற இடத்தில் வந்திறங்கிய வணிகர்கள் தங்கள் வர்த்தகஸ்தலமாக்கிக் கொண்டார்கள். இங்குதான் கறுவாப்பட்டை , மிளகு , கொப்பரா , தேங்காய் , எண்ணெய், கயிறு முதலியவைகளின் பண்டகசாலைகள் இருந்தன.
ஓல்லாந்த வியாபாரிகள் கறுவாபட்டையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள். அவ்விடம் இருந்த பண்டகசாலைகள் ஒல்லாந்தரால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரியால் பார்வையிடப்பட்டன. திருவிளங்க நகரத்தார் என்ற வாணிய செட்டிமார் இங்கு வியாபாரம் செய்யத்தொடங்கிய காலத்தில் இவ்டவிடத்தில் மேற்பார்வையாளராக இருந்த ஒல்லாந்த அதிகாரியைக் ‘கப்டன்’ என்ற அழைத்தார்கள். அவரின் நிர்வாகத்தில் இருந்த இடம் முழுவதையும் ‘கப்டன் கார்டன்ஸ்’ என்ற பெயரிட்டார்கள். அதுவே இன்று கப்பித்தாவத்தையெனப்படுகிறது.
டச்சு கவர்னர் துரையின் மலையாள பாஷைமொழி பெயர்ப்பாளரும் இவ்விடத்தில் வசித்துவந்தார். இம்மொழி பெயர்ப்;பாளர் பிறகு கிருஸ்துவ சமயத்தை அனுசரித்து பிரேன்சிஸ்கஸ் பௌலஸ் சூரியமூர்த்தி என்ற பெயருடன் விளங்கினார்.
உள்நாட்டு விளை பொருள்களெல்லாம் பாதைகள் மூலம் புத்தளம் , சிலாபம் , நீர்கொழும்பு முதலிய இடங்களிலிருந்து கப்பித்தாவத்தைக்கே வந்து சேரும். இவ்விடம் ஓர் உள்நாட்டு துறைமுகம் போன்றது. திருவனந்தபுரம் , நாகப்பட்டணம் , காரைக்கால் , கோவா முதலியயிடங்களுக்கு இங்கிருந்துதான் மேற்படி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
இங்கு வர்த்தகம் செய்துவந்த வணிக வைசியச் செட்டியார்கள். அவர்களிருந்த தோட்டத்தில் மாலை வேளைகளில் ஒன்று சேர்ந்து ஓர் மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை வணங்கி வந்தனர். இந்நிலை அதிககாலம் நீடிக்கவில்லை. சைவயாகம முறைப்படியாக அமைக்கப்பட்டாத ஆலயத்தில் வழிபாடு செய்வதை ஒரு குறையாகஎண்ணினர்.இச்சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் ஓர் கோயிலைக் கட்ட அவ்வைசியர்கள் பிறகு தீர்மானித்தார்கள்.
அதற்காக கொழும்பு மாநகரில் வர்த்தகம் செய்துவந்த செட்டியார்களிடமிருந்து கோயிலுக்காக நன்கொடை பெற்று 1783ல் ஸ்ரீ வீரபத்தரன் செட்டியாருக்குச் சொந்தமான இடத்தில் சிவன்கோயிலைக் கட்ட அஸ்திவார யிடப்பட்டது. ஸ்ரீ வீரப்பத்திரன் செட்டியாரே சிவாலயம் கட்ட நிதி திரட்டும் பொறுப்பும் ஏற்று அக்கோயிலைக் கட்டும் திருப்பணியையும் ஏற்றுக்கொண்டார். அச் சிவன்கோயில் தான் இன்று ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயியன்று அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் திருவிளங்க நகரத்தாரே இலங்கையின் வாணிப்பத்தில் பெரும் பகுதியைச் சேர்ந்தவர்களாகையால் பணமும் கீர்த்தியும் அதிகாரமுடையவர்களாய் இருந்தனர். ஆகவே ஸ்ரீ வீரபத்ரன் செட்டியார் எடுத்த கைங்கர்யம் இனிது நிறைவேறியது. சைவ விதிப்படி கும்பாபிஷேகம் முதலியன செய்யப்பட்டு இந்துக்கள் யாவரும் அக்காலத்தில் சிவன் வழிபாடு செய்து வருவாராயினர். திருவிளங்க நகரத்தாரும் சிறப்பும் பெருமையும் அடைந்தனர்.